குஜராத்: காற்றாடி நூல் கழுத்தை அறுத்து 3 குழந்தைகள் உள்பட 6 பேர் சாவு - 130 பேர் காயம்

குஜராத் மாநிலத்தில் உத்தராயண பண்டிகை கொண்டாட்டத்தின்போது பறக்கவிடப்பட்ட காற்றாடிகளின் நூல் கழுத்தை அறுத்ததில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர். 130 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-01-16 23:21 GMT

கோப்புப்படம்

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் மகர சங்கராந்தியையொட்டி உத்தராயண பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகையின்போது மக்கள் வண்ண வண்ண காற்றாடிகளை பறக்கவிட்டு குதூகலிப்பது பிரசித்தமான வழக்கம். ஆனால் இந்த வழக்கத்தால் சில அப்பாவிகளின் உயிர் அநியாயமாக பறிபோய்விடுவதுதான் துயரம். காற்றாடிகளின் மாஞ்சா நூல், சிலரின் கழுத்தை அறுத்து பலிவாங்கிவிடுகிறது.

சிறுமிகள், சிறுவன் பலி

அந்த மாநிலத்தின் பவநகரில் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கீர்த்தி என்ற 2 வயது சிறுமியின் கழுத்தை காற்றாடி நூல் அறுத்தது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

அதேபோல, விஸ்நகரில் தனது தாயுடன் தெருவில் நடந்து சென்ற கிஸ்மத் என்ற 3 வயது பெண்குழந்தை, காற்றாடி நூலால் கழுத்து அறுபட்டது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அக்குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ராஜ்கோட் நகரில் ரிஷப் வர்மா என்ற 7 வயது சிறுவன், காற்றாடி வாங்கிக்கொண்டு பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். அப்போது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் பரிதாபமாக பலியானான்.

மேலும் 3 பேர் சாவு

இதேபோல வதோதரா, கட்ச், காந்திநகர் மாவட்டங்களில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் காற்றாடி நூலால் கழுத்து அறுபட்டு செத்தனர். காற்றாடி நூலால் மேலும் 130 பேர் காயமடைந்தனர்.

உயரமான இடங்களில் இருந்து காற்றாடி பறக்கவிட்டபோது கீழே தடுமாறி விழுந்த 46 பேரும் காயமுற்றனர்.

சாலை விபத்துகள் அதிகரிப்பு

உத்தராயண பண்டிகையின்போது குஜராத்தில் சாலை விபத்துகளும் அதிகரித்தன. கடந்த சனிக்கிழமை 820 பேரும், நேற்று முன்தினம் 461 பேரும் சாலை விபத்துகளில் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்