3 மனைவிகள் 7 பிள்ளைகள் 180 வழக்குகள் 5 ஆயிரம் கார்கள் ஒரு கார் திருடனின் சொகுசு வாழ்க்கை

கொள்ளையடித்த கார்களை விற்று, டெல்லி, மும்பை, வடகிழக்கு மாநிலங்கள் என பல்வேறு பகுதிகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.

Update: 2022-09-06 09:48 GMT

புதுடெல்லி:

கடந்த 27 ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை திருடிய, இந்தியாவின் மிகப் பெரிய கார் திருடன் கைது செய்யப்பட்டுள்ளான்.

டெல்லியில் ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கையை தொடங்கிய அனில் சவுகான் என்பவர், கடந்த 1995ம் ஆண்டு முதல் கார்களை திருடும் கொள்ளையனாக மாறியுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கார்களை திருடி நேபாளம், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில், அனில் சவுகானை டெல்லி போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். தேஷ் பந்து குப்தா சாலைப் பகுதியில் இருந்து அவரைப் பிடித்தனர். இதுதொடர்பான விசாரணையில், கடந்த 27 ஆண்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை அனில் சவுகான் திருடியது தெரியவந்துள்ளது.

அந்த காலகட்டத்தில், குறிப்பாக, மாருதி 800 கார்களை மட்டுமே குறிவைத்து அனில் சவுகான் திருடி வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், கொள்ளை சம்பவத்தின்போது, சில கார் டிரைவர்களை, அனில் சவுகான் கொலை செய்துள்ளதாகவும், தற்போது ஆயுத கடத்தலில் அவர் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

கொள்ளையடித்த கார்களை விற்று, டெல்லி, மும்பை, வடகிழக்கு மாநிலங்கள் என பல்வேறு பகுதிகளில் சொத்துக்களை வாங்கி குவித்து, அனில் சவுகான் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 52 வயதாகும் அனில் சவுகான் மீது மீது 180 வழக்குகள் உள்ளன. இதற்கு முன்பும் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். ஒருமுறை 5 ஆண்டு சிறைத்தண்டனையும் பெற்றுள்ளார். அனில் சவுகானுக்கு 3 மனைவிகள், 7 பிள்ளைகள் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாமில் அரசு ஒப்பந்ததாரராக இருந்த அவர், அங்குள்ள உள்ளூர் தலைவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவரிடமிருந்து 6 கைத்துப்பாக்கிகள் மற்றும் 7 தோட்டாக்களை போலீசார் மீட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்