தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட 5 மாநிலங்களுக்கு நவம்பரில் சட்டசபை தேர்தல்
தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட 5 மாநிலங்களுக்கு நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. டிசம்பர் 3-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க இருக்கிறது.;
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கார், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. எனவே இந்த மாநிலங்களில் புதிய அரசுகளை தேர்ந்தெடுப்பதற்காக சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
தேர்தல் கமிஷனர்கள் நேரடி ஆய்வு
இதற்காக அந்தந்த மாநில தேர்தல் கமிஷன்களுடன் இணைந்து இந்த முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தது. குறிப்பாக வாக்குச்சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் தயார் நிலை, ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் ஏற்பாடு உள்ளிட்ட பணிகளை மும்முரமாக செய்து வந்தது. மேலும் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் இந்த மாநிலங்களுக்கு நேரடியாக சென்று ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். அத்துடன் அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தியும் வந்தனர்.
நவம்பர் 7 முதல் 30-ந்தேதி வரை
இவ்வாறு சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்த நிலையில் நேற்று இந்த மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 5 மாநிலங்களிலும் அடுத்த மாதம் (நவம்பர்) 7 முதல் 30-ந்தேதி வரை என பல கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் சத்தீஸ்காரை தவிர மீதமுள்ள 4 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதன்படி மிசோரமில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நவம்பர் 7-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அத்துடன் சத்தீஸ்காரின் 20 தொகுதிகளிலும் அன்றைய தினம் வாக்குப்பதிவு நடக்கிறது. அந்த மாநிலத்தின் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு 17-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
மத்திய பிரதேசத்தின் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 17-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தின் 200 தொகுதிகளுக்கு 23-ந்தேதியும், தெலுங்கானாவின் 119 இடங்களுக்கு 30-ந்தேதியும் தேர்தல் நடத்தப்படுகிறது. 5 மாநிலங்களிலும் பதிவு செய்யப்படும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் மாதம் 3-ந்தேதி எண்ணப்படுகிறது.
இந்த விவரங்களை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் வெளியிட்டார்.
16 கோடி வாக்காளர்கள்
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-
சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் 8.2 கோடி ஆண்கள், 7.8 கோடி பெண்கள் என 16 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 60.2 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்கள் ஆவர். 5 மாநிலங்களிலும் மொத்தம் 679 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக 5 மாநிலங்களிலும் 1.77 லட்சம் வாக்குச்சாவடிகள் நிறுவப்படும். இதில் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளை பெண் ஊழியர்களே நடத்துவர். இந்த தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள், பாதுகாப்பு அமைப்புகள் உள்பட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தினோம். எத்தகைய தூண்டுதலும் இல்லாமல் வெளிப்படையான வாக்களிப்பை உறுதி செய்வதற்கான மேற்பார்வையை மேம்படுத்துவதற்காக முதல் முறையாக இந்த தேர்தல்களில் புதிய தேர்தல் பறிமுதல் மேலாண்மை அமைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது.
940 சோதனைச்சாவடிகள்
தேர்தல் நடைபெறும் மாநில எல்லைகளை கண்காணிப்பதற்காகவும், மது, பணம், இலவசங்கள் மற்றும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்வதற்காகவும் 940 சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும்.
பணபலத்தைப் பயன்படுத்துதற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கடைப்பிடிக்கப்படும். அத்துடன் வாலட்டுகள் மூலம் சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் பணப் பரிமாற்றங்கள் மீதும் கடுமையான கண்காணிப்பு இருக்கும்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் மாநில அரசுகள் அறிவிக்கும் இலவசங்கள் ஜனரஞ்சகத்தை தூண்டிவிடுகின்றன. இந்த நடைமுறையை நிறுத்துவது கடினம்.
கடந்த 5 ஆண்டுகளாக இது குறித்து சிந்திக்காத கட்சிகள், கடந்த ஒரு மாதம் அல்லது 15 நாட்களில வெளியிடுவது ஏன் என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இது மாநில அரசுகளின் களம்.
இவ்வாறு தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
அப்போது தேர்தல் கமிஷனர்கள் அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோரும் உடனிருந்தனர்.
பா.ஜனதா, காங்கிரஸ் கருத்து
5 மாநில தேர்தல் அறிவிப்பை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரவேற்று உள்ளார். பிரதமர் மோடி தலைமையின் கீழ் 5 மாநிலங்களிலும் பா.ஜனதா அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இதைப்போல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் தேர்தல் அறிவிப்பை வரவேற்று உள்ளதுடன், வளர்ச்சித்திட்டங்கள், சமூக நீதி மற்றும் முற்போக்கான வளர்ச்சி வாக்குறுதிகளுடன் மக்களை அணுகுவோம் என்று கூறினார்.
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில், மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கார் மாநிலங்கள் காங்கிரஸ் வசம் உள்ளன. தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதியும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் அதிகாரத்தில் உள்ளன. சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெறும் மிகப்பெரிய தேர்தல் இது என்பதால், இந்த தேர்தல் முடிவுகளை அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாடும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளது.