மங்களூருவில் சங்கிலி தொடர் விபத்தில் 4 வாகனங்கள் சேதம்
மங்களூருவில் சங்கிலி தொடர் விபத்தில் 4 வாகனங்கள் சேதமடைந்தன. இதில் 5 பேர் காயமடைந்தன.
மங்களூரு-
மங்களூரு நகர் தொக்கொட்டு பகுதியில் நேற்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காா் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டதாக தெரிகிறது. இதனை கவனிக்காமல் பின்னால் வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது. அத்துடன் லாரியின் பின்புறம் காரும், அந்த காரின் பின்புறம் கேரள அரசு பஸ்சும் அடுத்தடுத்து மோதின.
இந்த சங்கிலி தொடர் விபத்தில் 2 கார்கள், ஒரு லாரி, ஒரு அரசு பஸ் என 4 வாகனங்கள் சேதம் அடைந்தன. குறிப்பாக லாரி மற்றும் அரசு பஸ் இடையே சிக்கி கார் ஒன்று சுக்குநூறாக நொறுங்கியது.
இந்த விபத்தில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். லாரிக்கும், பஸ்சுக்கும் இடையே சிக்கிய காரில் டிரைவர் மட்டும் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மங்களூரு தெற்கு போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து மங்களூரு தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.