ரெயில் இ-டிக்கெட்டுகள் முறைகேடு வழக்கில் பெங்களூருவில் ஏஜெண்டுகள் உள்பட 4 பேர் கைது

பெங்களூருவில் ரெயில்வேயில் இ-டிக்கெட்டுகளில் முறைகேடுகள் செய்து வந்த ஏஜெண்டுகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மென்பொருளை விலைக்கு வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.

Update: 2022-09-18 20:29 GMT

பெங்களூரு:

4 பேர் கைது

பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் ரெயில்வே இ-டிக்கெட்டுகளை முறைகேடுகள் செய்து எடுப்பதாக ரெயில்வே போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து, இந்த முறைகேடுகளில் ஈடுபடும் கும்பலை பிடிக்க ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், பெங்களூரு ரெயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அவர்கள் கோரிபாளையாவை சேர்ந்த மவுல்வி நதீம் அக்தர் சித்திக் (வயது 35), பாதராயனபுராவை சேர்ந்த சையத் முகமது ஜூனேத் (30), மத்திகெரேயை சேர்ந்த வெங்கடேஷ் (37), யஷ்வந்தபுரத்தை சேர்ந்த சந்தோஷ் (35) என்று தெரிந்தது. இந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்டவர்கள் சித்திக் மற்றும் ஜூனேத் என்று தெரிந்தது. வெங்கடேஷ் மற்றும் சந்தோஷ் ஏஜெண்டுகள் ஆவார்கள்.

பாகிஸ்தானை சேர்ந்தவருக்கு தொடர்பு?

இவர்களில் சித்திக் சிறுவயதில் இருந்தே பீகாருக்கு செல்வது வழக்கம். சமீபமாக பீகாருக்கு செல்வதற்கு அவருக்கு ரெயிலில் டிக்கெட் கிடைக்காமல் இருந்துள்ளது. இதற்காக வெளிநாட்டை சேர்ந்த ஒருவரிடம் இருந்து கிங்க் என்ற மென்பொருளை (சாப்ட்வேர்) சித்திக் விலைக்கு வாங்கி இருக்கிறார். அந்த மென்பொருள் மூலமாக ரெயிலில் இ-டிக்கெட்டுகளை எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததுடன், ரெயில்வே துறைக்கும் மோசடி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. பயணிகளுக்கு டிக்கெட் பெற்றுக் கொடுக்க அதிக பணத்தை 4 பேரும் வாங்கி வந்ததும் தெரியவந்துள்ளது.

காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு எளிதில் டிக்கெட் கிடைக்க செய்வது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த இ-டிக்கெட் முறைகேடு பற்றி சைபர் கிரைம் போலீசாருக்கும் தகவல் கிடைத்திருந்தது. இதையடுத்து, ரெயில்வே போலீசார், சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து 4 பேரையும் கைது செய்திருந்தாா்கள். இந்த மோசடி மற்றும் முறைகேடுக்கு பின்னால் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுகுறித்து கைதான 4 பேரிடமும் ரெயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்