ராஜஸ்தானில் பழிக்கு பழி... 4 மாத குழந்தை உள்பட 4 பேர் படுகொலை; தீ வைத்து எரித்த கொடூரம்

ராஜஸ்தானில் பழிக்கு பழியாக 4 மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தின் 4 பேரை படுகொலை செய்து, தீ வைத்த கொடூர சம்பவம் தெரிய வந்து உள்ளது.

Update: 2023-07-19 10:22 GMT

ஜோத்பூர்,

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் செராய் கிராமத்தில் வசித்து வந்தவர் பூனாரம் (வயது 55). இவரது மனைவி பன்வாரி (வயது 50). இந்த தம்பதியின் மருமகள் தபு (வயது 23). இவருக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.

பூனாராமின் மகன் நேற்றிரவு (செவ்வாய் கிழமை) உணவு சாப்பிட்டு விட்டு இரவில் கல்குவாரியில் வேலைக்காக சென்று விட்டார். இதன்பின்பு அவரது குடும்பத்தினர் தூங்க சென்று உள்ளனர்.

இந்த நிலையில், பூனாராமின் வீட்டில் இருந்து இரவில் திடீரென புகை வந்து உள்ளது. இதனை அருகே வசித்து வந்தவர்கள் கவனித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி உள்ளனர். அவர்கள் வந்தபோது 4 பேரும் தீயில் எரிந்து உயிரிழந்து கிடந்து உள்ளனர்.

இதுபற்றி எஸ்.பி. தர்மேந்திர சிங் யாதவ் கூறும்போது, தனிப்பட்ட பகையினால் இந்த படுகொலை நடந்திருக்க கூடும். எனினும் ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார். பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் கொலையாளிகள் கோடரியை கொண்டு அவர்களை படுகொலை செய்து விட்டு, உடல்களை இழுத்து கொண்டு வந்து வீட்டின் முன்புறத்தில் வைத்து, பின்பு தீ வைத்து எரித்து உள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் அந்த குடும்பத்தினரின் உறவினர் என போலீசார் கூறுகின்றனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்