பயங்கரவாத செயல்களில் ஈடுபட சதிதிட்டம்: 4 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை; பெங்களூரு என்.ஐ.ஏ. கோர்ட்டு தீர்ப்பு
பயங்கரவாத செயல்களில் ஈடுபட சதிதிட்டம் தீட்டியதாக 4 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு என்.ஐ.ஏ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
பெங்களூரு:
பெங்களூரு சோழதேவனஹள்ளி போலீசார் கொள்ளை வழக்குகளில் கடந்த 2019-ம் ஆண்டு மிசானூர் ரகுமான், அசாதுல்லா, அப்துல்கரீம், லால்ஜான் ஷேக் ஆகிய 4 பேரை கைது செய்து இருந்தனர். விசாரணையில் 4 பேரும் சேர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட சதிதிட்டம் தீட்டியது தெரியவந்தது. மேலும் 4 பேரும் தங்கி இருந்த வீட்டில் இருந்து மின்னணு உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர். பின்னர் இந்த வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு, சோழதேவனஹள்ளி போலீசார் மாற்றி இருந்தனர்.
கைதான 4 பேர் மீதும் பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணை மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது 4 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆகி உள்ளதாக கூறிய நீதிபதி 4 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தார். இதையடுத்து 4 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்