மேற்கு வங்காளத்தில் 4 பேருக்கு பிஎப்-7 கொரோனா
மேற்கு வங்காளத்தில் 4 பேருக்கு பிஎப்-7 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
சீனாவில் 'பிஎப்.7' என்ற உருமாறிய கொரோனாவின் அலை எழுச்சி பெற்று வருகிறது. தினமும் பல லட்சம் பேர் இந்த வைரசால் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருவதாகவும் ஆய்வுத்தகவல்கள் வெளியாகின. சீனா கொரோனா விவகாரத்தில் வெளிப்படையாக தகவல்களைத் தர வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
இதன் காரணமாக சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இதனையடுத்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து இருக்கிறது. அதன்படி சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு 100 சதவிகித கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், மேற்குவங்காளத்தில் 4 பேருக்கு பிஎப்-7 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.