காஷ்மீரில் 35 முதல் 40 வெளிநாட்டு பயங்கரவாதிகள்; அதிர்ச்சி தகவல்
சர்வதேச எல்லை மற்றும் காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் ஊடுருவலை தடுக்கும் வகையில், பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய தேவை பற்றி சமீபத்தில் ஆலோசிக்கப்பட்டது.
புதுடெல்லி,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளை கண்டறிந்து மற்றும் ஒழிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர், உளவு பிரிவினர் மற்றும் போலீசார் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உளவு பிரிவினர் அளித்த தகவலின்படி, காஷ்மீரின் பீர் பாஞ்சால் பகுதிக்கு தெற்கே பயங்கரவாத செயல்களை மீண்டும் புதுப்பிக்க செய்யும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன என ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி, 35 முதல் 40 வெளிநாட்டு பயங்கரவாதிகள் சிறிய குழுக்களாக அந்த பகுதியில் செயல்பட்டு வருகின்றனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
இந்த வெளிநாட்டு பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு சேவை குழுவை சேர்ந்த முன்னாள் உறுப்பினர்களாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் ரஜோரி, பூஞ்ச் மற்றும் கத்துவா பிரிவுகளில் 3 ஆண்டுகளாக பயங்கரவாத செயல்களை புதுப்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, ரியாசி மற்றும் கத்துவா ஆகிய பகுதிகளில் சமீபத்தில் புனித யாத்திரை சென்ற இந்துக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
சர்வதேச எல்லை மற்றும் காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் ஊடுருவலை தடுக்கும் வகையில், பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய தேவையானது, சமீபத்திய பாதுகாப்பு ஆய்வுக்கான கூட்டங்களில் ஆலோசிக்கப்பட்டது.
இதற்கேற்ப, அந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு, ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அவர்களுடன் 200 சிறப்பு கவச வாகனங்களும் இயங்கி வருகின்றன. இந்த சூழலில், மத்திய உளவுப் பிரிவு அளித்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.