பொக்லைன் எந்திரத்தில் சிக்கி தொழிலாளர்கள் 3 பேர் பலி

விளைநிலத்தில் தூங்கி கொண்டிருந்தபோது பொக்லைன் எந்திரம் ஏறி உடல் நசுங்கி சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Update: 2023-06-14 21:28 GMT

ராய்ச்சூர்:

ஆழ்துளை கிணறுகள்

ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகாவில் நிலவஞ்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் புறநகர் பகுதியில் விளைநிலங்கள் உள்ளன. அந்த பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் லாரியுடன் தொழிலாளர்கள் அங்கு வந்தனர். இந்த நிலையில் ஆழ்துளை கிணறு தோண்டிய பிறகு, இரவு நேரமானதால், அவர்கள் விளைநிலத்திலேயே தங்கினர்.

மறுநாள் காலையில் அங்கிருந்து புறப்படுவதற்காக காத்திருந்தனர். இந்த நிலையில் இரவில் அவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பொக்லைன் எந்திரம் ஒன்று வந்தது. விளைநிலத்தில் அவர்கள் தூங்குவது தெரியாமல், டிரைவர் பொக்லைன் எந்திரத்தை அவர்கள் மீது ஏற்றினார்.

பொக்லைன் எந்திரம்

இதில் அங்கு படுத்து தூங்கி கொண்டிருந்த 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் தேவதுர்கா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் அவர்கள் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பொக்லைன் எந்திரம் ஏறியதில் உயிரிழந்தவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்களான விஷ்ணு(வயது 26), சிவராம்(28), பலராம்(30) ஆகியோர் என்பது தெரிந்தது. அவர்கள் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்ட பின்னர் தூங்கி கொண்டிருந்தபோது பொக்லைன் எந்திரம் ஏறி உடல்நசுங்கி அவர்கள் உயிரிழந்தது தெரிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்