கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்; ராகுல் காந்தி அறிவிப்பு

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலை இல்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

Update: 2023-03-20 20:24 GMT

பெங்களூரு:

தேர்தல் பிரசாரம்

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகத்தில் இப்போதே வருகை தந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகளும், காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோரும் பாதயாத்திரை, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்கள்.

அதுபோல் ஆம் ஆத்மி கட்சி சார்பில், அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, மாநில மூத்த தலைவர் குமாரசாமி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இளைஞர்கள் புரட்சி மாநாடு

இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரைக்கு பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி நேற்று கர்நாடகம் வந்தார். கர்நாடக காங்கிரஸ் சார்பில் பெலகாவியில் நடைபெற்ற இளைஞர்கள் புரட்சி மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.

அவர், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லாமல் உள்ள பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், பாலிடெக்னிக் படித்தவர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் திட்ட வாக்குறுதியை அறிவித்தார். அதன் பிறகு ராகுல் காந்தி பேசியதாவது:-

சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகம் வழியாக நான் மேற்கொண்ட ஒற்றுமை யாத்திரை சென்றது. இந்த யாத்திரையின்போது அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்தீர்கள். இதன் மூலம் யாத்திரையை வெற்றிகரமானதாக மாற்றினீர்கள். அதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த தேசம் அனைவருக்கும் சேர்ந்தது என்ற செய்தியை நான் மேற்கொண்ட யாத்திரை வெளிப்படுத்தியது.

ரதம் இருக்கவில்லை

இது ஓரிருவரின் சொத்தோ அல்லது அதானியின் சொத்தோ அல்ல. இந்த நாடு இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு சேர்ந்தது. எனது யாத்திரையில் பெரிய ரதம் இருக்கவில்லை. எனது யாத்திரையில் அனைவரும் சமமாக என்னுடன் நடந்தனர். கர்நாடகத்தில் கிடைத்தது போல் அனைத்து மாநிலங்களிலும் மக்களின் ஆதரவு கிடைத்தது.

விரோதத்தின் சந்தையில் லட்சக்கணக்கான மக்கள் அன்பு கடையை திறந்தனர். கர்நாடகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டது. கர்நாடகத்தில் உள்ள பா.ஜனதா அரசு, 40 சதவீத கமிஷன் அரசு என்று அனைத்து தரப்பு மக்களும் சொல்கிறார்கள். ஒப்பந்ததாரர்கள் சங்கம், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி 40 சதவீத கமிஷன் பெறுவதாக புகார் தெரிவித்தனர்.

இளைஞர்களின் புகார்

மைசூரு சாண்டல் சோப்பு வாரிய தலைவராக இருந்தவரின் வீட்டில் ரூ.8 கோடி பணம் சிக்கியது. அவரை கர்நாடக அரசு பாதுகாக்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு, கல்லூரி உதவி ஆசிரியர் நியமன முறைகேடு, பொதுப்பணித்துறையில் உதவி என்ஜினீயர் நியமன முறைகேடு என்று எல்லாவற்றிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இது லட்சக்கணக்கான இளைஞர்களின் புகார் ஆகும்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.3 ஆயிரமும், பாலிடெக்னிக் படித்தவர்களுக்கு ரூ.1,500-ம் வழங்கப்படும். கர்நாடகத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம். கர்நாடக அரசு துறைகளில் காலியாக உள்ள 2½ லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

இலவச மின்சாரம்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், ரேஷன் கடைகளில் மாதம் 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். கர்நாடகத்தில் ஊழல் ஆட்சி நடத்தி வரும் பா.ஜனதா அரசை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும். கர்நாடகத்திற்கு இந்த தேர்தல் மிக முக்கியமானது.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்