காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் கைது

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் அடிமட்ட உறுப்பினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-08-27 00:56 GMT



சோப்பூர்,



ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் நகர காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து அந்நகர பகுதியில் கூட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களில், ராஷ்டீரிய ரைபிள்ஸ் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீசாரும் அடங்குவார்கள்.

இந்த பணியானது போமை சவுக் பகுதியில் நடத்தப்பட்டு உள்ளது. அப்போது, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் அடிமட்ட உறுப்பினர்களான ஷாரீக் அஷ்ரப், சாக்லைன் முஷ்டாக் மற்றும் தவுபீக் ஹசன் ஷேக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோரிபுரா பகுதியில் இருந்து போமை பகுதிக்கு சந்தேகத்திற்குரிய வகையில் சென்று கொண்டிருந்த அவர்கள் 3 பேரை நிற்கும்படி படையினர் கூறியபோது, அவர்கள் தப்பி செல்ல முயற்சித்து உள்ளனர். எனினும், போலீசாரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 3 கையெறி குண்டுகள், 9 போஸ்டர்கள் மற்றும் 12 பாகிஸ்தானிய கொடிகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

அவர்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட குடிமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான சந்தர்ப்பம் வாய்ப்பதற்காக தேடி அலைந்துள்ளனர் என முதல் கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி போமை காவல் நிலையத்தில் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து போலீசாரின் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்