அசுத்த தண்ணீரை குடித்த பெண் உள்பட 3 பேர் சாவு: ராய்ச்சூரில் முழுஅடைப்பு போராட்டம்

அசுத்த தண்ணீரை குடித்த 3 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ராய்ச்சூரில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த விவகாரத்தில் நகரசபை என்ஜினீயர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-06-06 22:30 GMT

பெங்களூரு: அசுத்த தண்ணீரை குடித்த 3 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ராய்ச்சூரில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த விவகாரத்தில் நகரசபை என்ஜினீயர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

3 பேர் சாவு

ராய்ச்சூர் நகரசபைக்கு உட்பட்ட வார்டுகளில் வசித்து வரும் மக்களுக்கு நகரசபைக்கு சொந்தமான டேங்கர் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக நகரசபை சார்பில் வினியோகிக்கப்படும் தண்ணீர் அசுத்தமாக இருப்பதாகவும், சுத்தமான தண்ணீரை வினியோகிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகரசபை சார்பில் வினியோகம் செய்யப்பட்ட அசுத்த தண்ணீரை குடித்த குழந்தைகள் உள்பட 60 பேருக்கு வாந்தி-மயக்கம் உண்டானது. இதனால் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மல்லம்மா என்ற பெண்ணும், அப்துல், நூர் அகமது ஆகியோரும் உயிரிழந்தனர்.

முழு அடைப்பு போராட்டம்

இந்த நிலையில் நகரசபை அதிகாரிகளை கண்டித்து நேற்று ராய்ச்சூரில் முழு அடைப்பு நடந்தது. அதன்படி ராய்ச்சூரில் டவுனில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தது. நகருக்குள் ஒரு சில பஸ்கள் மட்டும் ஓடின. ஆட்டோக்கள் ஓடவில்லை.

இதையடுத்து 3 பேர் பலியானதற்கு நகரசபை அதிகாரிகள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி நகரசபை அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

நகரசபை என்ஜினீயர் இடமாற்றம்

அப்போது நகரசபை அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டது. இதற்கிடையே உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத்திற்கு பதிலாக தலா ரூ.15 லட்சம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்..

இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நகரசபை என்ஜினீயரான கிருஷ்ணா என்பவரை அரசு பணி இட மாற்றம் செய்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்