லாரியில் கடத்த முயன்ற 234 கோதுமை மூட்டைகள் பறிமுதல்
சிவமொக்காவில் லாரியில் கடத்த முயன்ற 234 கோதுமை மூட்டைகளை உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சிவமொக்கா:
சிவமொக்கா டவுன் பி.எச்.சாலையில் உள்ள உணவு வழங்கல் துறையின் குடோனில் இருந்து கோதுமை மூட்டைகளை ஏற்றி ெகாண்டு ஒரு லாரி புறப்பட்டது. அப்போது அந்த பகுதி கன்னட அமைப்பை சேர்ந்த சந்தோஷ், அவரது நண்பர் ஆகியோர் சந்தேகத்தின்பேரில் லாரி டிரைவரிடம் கோதுமை மூட்டைகள் எங்கு செல்கிறது என்று கேட்டுள்ளனர். அதற்கு லாரி டிரைவர் சிக்கமகளூருவில் உள்ள அரசு பள்ளிகளுக்கு எடுத்து செல்வதாக கூறியுள்ளார். ஆனாலும் சந்தேகமடைந்த அவர்கள் லாரியை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது அந்த லாரி சிக்கமகளூரு செல்லாமல் சிவமொக்கா-பத்ராவதி இடையே உள்ள மாச்சேனஹள்ளி தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மாவு ஆலைக்கு சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், சிவமொக்கா போலீசாருக்கும், உணவு வழங்கல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் மாவு ஆலைக்கு வந்து சோதனை செய்தனர். போலீசார் வருவதை பார்த்து லாரி டிரைவர் பசவராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். விசாரணையில், கோதுமை மூட்டைகளை சட்டவிரோதமாக கடத்தி தனியார் மாவு ஆலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் லாரியில் இருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 234 கோதுமை மூட்டைகளை லாரியுடன் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு லாரி உரிமையாளர் சிவக்குமார் மற்றும் தப்பிஓடிய டிரைவர் பசவராஜை வலைவீசி தேடிவருகின்றனர்.