கர்நாடக சட்டசபை தேர்தல்: வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே 221 பேர் மனு

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே 221 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Update: 2023-04-13 18:45 GMT

பெங்களூரு:

சட்டசபை தேர்தல்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 13-ந் தேதி (நேற்று) தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையொட்டி பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகின. இந்த தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா 212 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் (எஸ்) 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

அக்கட்சிகள் மீதமுள்ள வேட்பாளர்களை ஓரிரு நாளில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கட்டுப்பாடு

இதற்கிடையே வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது, உடன் 4 பேர் மட்டுமே வர வேண்டும், ஆதரவாளர்கள் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் நிற்க வேண்டும், தேர்தல் அலுவலகத்தின் அருகில் 3 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தினமும் மனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை மட்டுமே நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மேலும் பொது வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகை தலா ரூ.10 ஆயிரமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வேட்பாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் டெபாசிட் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மந்திரி முருகேஷ் நிரானி

வேட்பு மனு தாக்கலையொட்டி தேர்தல் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100 மீட்டர் தொலைவில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திட்டமிட்டபடி நேற்று தொடங்கியது. இதற்கான அரசாணையை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நேற்று காலை வெளியிட்டனர். அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலகங்களில் அதிகாரிகள் மனுக்களை பெற தயாராகினர்.

முதல் நாளில் பீலகி தொகுதியில் தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, தேர்தல் அதிகாரியிடம் தனது மனுவை தாக்கல் செய்தார். சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் சிக்பள்ளாப்பூர் தொகுதியிலும், கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் யஷ்வந்தபுரா தொகுதியிலும், பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் கதக் மாவட்டம் நரகுந்து தொகுதியிலும் மனு தாக்கல் செய்தனர்.

221 பேர் மனு தாக்கல்

மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே 221 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் ஆண்கள் 197 பேரும், பெண்கள் 24 பேரும் அடங்குவர். இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான ஆளும் பா.ஜனதாவை சேர்ந்த 27 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 26 பேரும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 10 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஒருவரும், ஜனதா தளம் (எஸ்) சார்பில் 12 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை போட்டியிடும் ஹாவேரி மாவட்டம் சிக்காவி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நேற்று மனு தாக்கல் செய்தார். அவர் 234-வது முறையாக தேர்தலில் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பாக இயங்கின

பா.ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கலுக்கு முன்பு கட்சி தொண்டர்களுடன் ஊர்வலவமாக வந்தனர். இதனால் அரசு அலுவலகங்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்களால் பரபரப்புடன் இயங்கின.

பொதுவாக வேட்பு மனு தாக்கல் தொடங்கினாலும் முதல் நாளில் மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால் இந்த தடவை கர்நாடக தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில் முதல் நாளிலேயே 4 மந்திரிகள் உள்பட மொத்தம் 221 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கட்சிகளை சேர்ந்த 100 பேர் அடங்குவர். எந்த கட்சியையும் சாராத 45 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் வேட்பாளர்கள் முதல் நாளிலேயே மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். இதனால் அடுத்து வரும் நாட்களில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று விடுமுறை

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) கர்நாடகத்தில் அரசு விடுமுறை ஆகும். அதனால் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை (சனிக்கிழமை) வழக்கம் போல் மனு தாக்கல் நடைபெறும். பிறகு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பொதுவிடுமுறை நாள் என்பதால் அன்றைய தினமும் மனு தாக்கல் செய்ய முடியாது.

அதன் பிறகு தொடர்ச்சியாக 17-ந்தேதி (திங்கட்கிழமை) 4 நாட்கள் மனு தாக்கல் செய்யலாம். 20-ந் தேதி மதியம் 3 மணிக்கு மனு தாக்கல் நிறைவடைகிறது. அதன் பிறகு வரும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தேர்தல் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 21-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும்.

இறுதி பட்டியல்

ஏற்றுக்கொள்ளப்படும் மனுக்களை வாபஸ் பெற 24-ந் தேதி கடைசி நாள் ஆகும். போட்டியில் இருந்து விலகி கொள்ள விரும்பும் வேட்பாளர்கள் அன்றைய தினம் மதியம் 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

மே மாதம் 10-ந் தேதி ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்று ஆணையம் கூறியுள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் 13-ந் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை செலவு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் தொடங்கியதால், அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்