ராணுவ வீரர் விடை பெற்ற பின் கதவுக்கு பின்னால் கண்கலங்கும் தாயார்; வைரலான புகைப்படம்

ராணுவத்தில் பணியாற்றும் மகன் விடை பெற்று சென்ற பின் கதவுக்கு பின்னால் நின்று கண்கலங்கும் தாயாரின் புகைப்படம் ஒன்றுக்கு நெட்டிசன்கள் பலர் தங்களது அன்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

Update: 2022-05-09 11:32 GMT





புதுடெல்லி,



அன்னையரின் அன்பு, தியாகம் செய்வதற்கான திறன் ஆகியவற்றுக்கு எல்லையே கிடையாது.  இதனை பல தருணங்களில் பலரும் உணர்ந்திருக்க கூடும்.  இதுபற்றிய புகைப்படம் ஒன்று வெளிவந்து வைரலாகி வருகிறது.

ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  அதில், ராணுவத்தில் பணியாற்றும் தனது மகன், வீட்டில் இருந்து புறப்பட்டு பணிக்கு செல்ல தயாராகிறார்.

அவரை வழியனுப்பி வைக்க வாசல் வரை வந்த அவரது தாயார், வீரர் வெளியே சென்றதும் கதவை சாத்தி விட்டு கண்கலங்குகிறார்.  தாய் நாட்டின் நலனுக்காக செல்லும் தனது மகனை ராணுவத்துக்கு அனுப்பி வைக்கும் தாயாரின் உயரிய தியாகம் பற்றி, அந்த புகைப்படம் ஒன்றே ஆயிரம் வார்த்தைகளுக்கு ஈடான விளக்கம் தரும்.

இந்த புகைப்படத்திற்கு சதீஷ் துவா, உணர்ச்சிகர தலைப்பு ஒன்றையும் எழுதியுள்ளார்.  அதில், மூன்று தசாப்தங்களுக்கு முன்பு தனது தாயாரை இழந்தேன் என அவர் தெரிவித்து உள்ளார்.  ஒவ்வொரு ராணுவ வீரரின் தாயாரிடத்திலும் தனது தாயாரை பார்க்கிறேன்.  அன்னை இந்தியாவில் அவரை பார்க்கிறேன்.  தாயாருக்கு எனது வணக்கங்கள் என்று தெரிவித்து உள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.  அதில் ஒருவர், தியாகத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டு இந்த புகைப்படம் என தெரிவித்து உள்ளார்.  மற்றொருவர், மனது நெருடும் புகைப்படம் அது என்று தெரிவித்து உள்ளார்.



மேலும் செய்திகள்