உலக சுகாதார அமைப்பின் அறிக்கை, ஆதாரம் இல்லாதது- மாநில சுகாதார மந்திரிகள்
கொரோனாவால் இந்தியாவில் 47 லட்சம் பேர் பலியானதாக கூறும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை, ஆதாரம் இல்லாதது என மாநில சுகாதார மந்திரிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளர்.
கேவடியா,
எதிர்த்து தீர்மானம்
மத்திய சுகாதாரம், குடும்ப நல கவுன்சிலின் 14-வது மாநாடு, குஜராத் மாநிலம் கேவடியாவில் 3 நாட்களாக நடந்தது. மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்.
கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த மாநாட்டில், இந்தியாவில் கொரோனாவால் 2 ஆண்டுகளில் 47 லட்சம் பேர் இறந்துள்ளதாக காட்டும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை எதிர்த்து முன்தினம் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தில், “கொரோனா இறப்புகள் பற்றிய உலக சுகாதார அமைப்பின் கணிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த எண்ணிக்கைக்கு காரணமான உலக சுகாதார அமைப்பின் மாடலிங் முறை குறைகளை உடையது” என கூறப்பட்டிருந்தது.
நற்பெயருக்கு களங்கம்...
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மாநில சுகாதார மந்திரிகள் பலரும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை ஆதாரம் இல்லாதது என கடுமையாக சாடினர். அது வருமாறு:-
கே.சுதாகர் (கர்நாடக சுகாதார மந்திரி):-
இந்த அறிக்கை, இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி ஆகும். இந்த மதிப்பீட்டில், உலக சுகாதார அமைப்பு பயன்படுத்திய மாடலிங் முறையின் பின்னணியில் எந்த நியாயமும் இல்லை. தரவு சேகரிப்பு, கொரோனா இறப்பு கண்காணிப்புக்கு நமது நாட்டில் சட்டபூர்வமான, வெளிப்படையான அமைப்பு இருப்பதால் நாங்கள் அந்த எண்ணிக்கையில் நிற்கிறோம்.
அறிவியல் பூர்வமானது அல்ல
விஜய் சிங்க்லா ( பஞ்சாப் சுகாதார மந்திரி):-
உலக சுகாதார அமைப்பின் கணிப்பு தவறாக சித்தரிக்கப்பட்டதாகும். 47.4 லட்சம் கொரோனா இறப்புகள் நடந்ததாக காட்டும் தரவுக்கான சரியான கணக்கீடு செய்யப்படவில்லை. உலக சுகாதார அமைப்பின் மாடலிங் முறை அறிவியல்பூர்வமானது அல்ல.
விஷ்வாஸ் சாரங்க் ( ம.பி. மருத்துவ கல்வி மந்திரி):-
கொரோனாவை கையாண்டதில் இந்தியாவின் சாதனைகளை குறிப்பாக குறைவான இறப்புகள், அதிகபட்ச தடுப்பூசி எண்ணிக்கை போன்றவற்றை குறைத்து மதிப்பிடுவதற்காக சதி நடந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கணிப்பு தவறானது. கணித அடிப்படையில்லாதது.
பா.ஜ.க. ஆட்சி நடக்காத மாநிலங்களின் சுகாதார மந்திரிகள் உள்பட 20 முதல் 22 வரையிலான சுகாதார மந்திரிகள் இந்த அறிக்கையை நிராகரித்தனர்.
எம்.கே.சர்மா (சிக்கிம் சுகாதார மந்திரி) மற்றும் மங்கள் பாண்டே (பீகார் சுகாதார மந்திரி):-
உலக சுகாதார அமைப்பின் அறிக்கை, உண்மைகள் இல்லாதது. அதன் மாடலிங் முறை அறிவியல் பூர்வமானது அல்ல.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை மத்திய அரசு ஏற்கனவே நிராகரித்து விட்டது நினைவுகூரத்தக்கது.