மும்பை எல்.ஐ.சி. கட்டிடத்தில் பயங்கர தீ
மும்பை எல்.ஐ.சி. கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆவணங்கள், பொருட்கள் எரிந்து நாசமாகின.
மும்பை,
மும்பை எல்.ஐ.சி. கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆவணங்கள், பொருட்கள் எரிந்து நாசமாகின.
எல்.ஐ.சி. கட்டிடத்தில் தீ
மும்பை சாந்தாகுருஸ் மேற்கு எஸ்.வி. ரோடு பகுதியில் 2 மாடியில் ‘ஜீவன் சேவா பில்டிங்’ என்ற எல்.ஐ.சி. கட்டிடம் உள்ளது. இதில் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் மற்றும் எஸ்.எஸ்.எஸ். டிவிஷனல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை 6.40 மணியளவில் கட்டிடத்தின் 2-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் 5 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவர்கள் ராட்சத ஏணியை பயன்படுத்தி, கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 6 மணி நேரத்திற்கும் மேலாக போராடி கட்டிடத்தில் எரிந்த தீயை வீரர்கள் முழுமையாக அணைத்தனர். தொடர்ந்து கட்டிடத்தை குளிர்விக்கும் பணி நடந்தது.
ஆவணங்கள் எரிந்தன
தீ விபத்தில் கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்த மேஜை, கணினி, ஆவணங்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. எனினும் காலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் கட்டிடத்தில் ஊழியர்கள் யாரும் இல்லை. இதனால் விபத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி எல்.ஐ.சி. நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தீ விபத்தில் சேதம் ஏற்பட்டாலும் வாடிக்கையாளர்களுக்கான தகவல் தொழில்நுட்ப தரவுகள் அனைத்தும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் மூலம் பாதுகாக்கப்பட்டு உள்ளன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்த பிரச்சினையும் இன்றி சேவைகள் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.