நாடு முழுவதும் அனல் காற்று குறைந்தது வானிலை ஆராய்ச்சி துறை தகவல்
இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் வெயில் அளவு அதிகமாக இருந்தது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் கொளுத்தியது.
புதுடெல்லி,
இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் வெயில் அளவு அதிகமாக இருந்தது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் கொளுத்தியது. குறிப்பாக, உத்தரபிரதேச மாநிலம் பாண்டாவில் கடந்த 29-ந் தேதி 117 டிகிரி வெயில் பதிவானது.
ஆனால், தற்போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அனல் காற்று குறைந்திருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி துறை நேற்று தெரிவித்தது. ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, அரியானா ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ்வரை குறைந்துள்ளது.
அடுத்த 5 நாட்கள், வடமேற்கு இந்தியா, மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரியை தாண்ட வாய்ப்பில்லை என்று வானிலை ஆராய்ச்சி துறை கூறியுள்ளது.
அதே சமயத்தில், மராட்டிய மாநிலத்தின் சில பகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதல் அனல்காற்று வீசக்கூடும் என்றும், ராஜஸ்தானில் சில பகுதிகளில் 6-ந் தேதி முதல் அனல்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 104 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானால், அது அனல்காற்றாக வகைப்படுத்தப்படுகிறது.
பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அடுத்த 2 நாட்களில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி துறை கூறியுள்ளது.