குஜராத் கலவரத்திற்கு பின் மோடியை பதவியிலிருந்து நீக்கக்கூடாது என்று பால்தாக்கரே கூறினார் - உத்தவ் தாக்கரே!

2002ம் ஆண்டு வெடித்த கோத்ரா கலவரத்திற்கு பிறகு, அப்போதைய முதல் மந்திரியாக இருந்த மோடியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

Update: 2022-05-02 13:48 GMT
மும்பை,

மராட்டிய மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று தன்னுடைய தந்தையும், சிவசேனா நிறுவனருமான மறைந்த பால்தாக்கரே பற்றி உயர்வாக குறிப்பிட்டு பேசினார். தன்னுடைய தந்தை,  நரேந்திர மோடிக்கு ஆதரவளித்துள்ளார் என்று பேசியுள்ளார்.

உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

"குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு வெடித்த கோத்ரா கலவரத்திற்கு பிறகு, அப்போதைய முதல் மந்திரியாக இருந்த மோடியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

அப்போது நாட்டின் பிரதமராக இருந்தவர் பாஜக தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய். அந்த காலக்கட்டத்தில், மற்றொரு முக்கிய பாஜக தலைவர் எல் கே அத்வானி ஒரு பேரணியில் கலந்து கொள்ள மும்பை வந்திருந்தார். 

அவர் பால் தாக்கரேவுடன் அந்த கோரிக்கையை பற்றி விவாதித்தார்.  “பாலாசாகேப், மோடியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று கேட்டார்.

பாலாசாகேப் அத்வானியிடம், “மோடி நீக்கப்பட்டால் குஜராத்தை பாஜக இழக்கும். மோடியை அகற்றினால், இந்துத்துவா பாதிக்கப்படும். மோடியை தொடக்கூடாது” என்று கூறினார். 

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேட்டியில் கூறினார். 

தொடர்ந்து பேட்டியளித்த அவர் கூறுகையில்:- “அப்போது மோடி பிரதமராக முன்னிறுத்தப்படவில்லை. மோடியை ஒரு தனி நபராக மதிக்கிறேன். உடனே நாங்கள் கூட்டணி அமைத்து விடுவோம் என்ற அர்த்தத்தில் இதை நான் சொல்லவில்லை. 

இதை நான் தனிப்பட்ட முறையில் சொல்கிறேன். பாசம் இருக்கிறது, அதுதான் நமது கலாச்சாரம்.

ஒரு பிரதமர் முழு நாட்டிற்கும் சொந்தமானவர், ஒரு கட்சிக்கு மட்டும் அல்ல” என்று கூறினார். 

மேலும் செய்திகள்