உத்தரப்பிரதேசம்: மத வழிபாட்டு தலங்களில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் அகற்றம்..!
உத்தரப்பிரதேசத்தில் மத வழிபாட்டு தலங்களில் இதுவரை 53,942 ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் மத வழிபாட்டு தலங்களில் பயன்படுத்தும் ஒலிப்பெருக்கிகள் பிறருக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது என அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கடந்த 18-ம் தேதி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மதவழிபாட்டு தலங்களில் ஒலிப்பெருக்கியின் ஒலி அளவை குறைக்கும்படியும், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அகற்றும்படியும் மாநில உள்துறை கடந்த 23-ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவையடுத்து மாநிலம் முழுவதும் மத வழிபாட்டு தலங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், மாநிலம் முழுவதும் இன்று காலை 7 மணி வரையில் மத வழிபாட்டு தலங்களில் அதிக ஒலி எழுப்பும் வகையில் பொருத்தப்பட்டிருந்த 53 ஆயிரத்து 942 ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பிரஷாந்த் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், 60 ஆயிரத்து 295 ஒலிபெருக்கிகளின் ஒலி அளவு குறைக்கப்பட்டு நிலையான ஒலி அளவு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கூறினார்.