தேச பாதுகாப்பு சவால்களை முப்படைகள் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ளும்; மனோஜ் பாண்டே பேட்டி
தேச பாதுகாப்பு சவால்களை முப்படைகள் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ளும் என புதிதாக பொறுப்பேற்ற ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பேட்டியில் இன்று கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய ராணுவத்தின் 28வது தலைமை தளபதியான எம்.எம். நரவனே நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதனால் அந்த பதவிக்கு, ராணுவ துணை தலைமை தளபதியான மனோஜ் பாண்டே பொறுப்பேற்று கொண்டார்.
நாட்டின் புதிய ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற பாண்டேவுக்கு டெல்லியின் தெற்கு பிளாக் பகுதியில் இன்று ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை ஏற்று கொண்ட அவர் வீரர்களை பாராட்டி பேசினார்.
இதன்பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, தேச பாதுகாப்பு சவால்கள் மற்றும் மோதல் சூழ்நிலைகளை கடற்படை மற்றும் விமான படை ஆகிய மற்ற இரு படைகளுடன் ஒன்றாக இணைந்து ராணுவம் எதிர்கொள்ளும்.
ஆயுத படைகளுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதே எனது நோக்கம் என்று அவர் கூறியுள்ளார். இந்திய ராணுவத்தின் அனைத்து அதிகாரிகளும் வெவ்வேறு ஆயுத மற்றும் சேவை பணியில் இருந்து வந்தபோதும், பணி மற்றும் தொழில் சார்ந்த வளர்ச்சியில் சம வாய்ப்பினை பெறுகிறார்கள்.
மூத்த தலைமைத்துவ பதவிகளில் உள்ள அனைத்து அதிகாரிகளும் அனைத்து வகையிலான போர்புரிவதிலும் பயிற்சி பெற்றவர்கள் என்றும் பாண்டே பேட்டியில் கூறியுள்ளார்.