நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல மலையாள நடிகருக்கு லுக்-அவுட் நோட்டீஸ்!
அவர் மத்திய கிழக்கு நாடுகளில் எங்காவது பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
கொச்சி,
விஜய் பாபுவின் புரொடக்ஷன் ஹவுஸ் தயாரித்த படங்களில் நடித்த பெண் நடிகை ஒருவர், ஏப்ரல் 22ஆம் தேதி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கடந்த ஒன்றரை மாதங்களாக தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபுவால் தான் உடல் ரீதியான தாக்குதல் மற்றும் பாலியல் சுரண்டல்களை அனுபவித்ததாக அந்த பெண் விவரித்தார்.
இதற்கிடையே, விஜய் பாபு நேற்று திடீரென பேஸ்புக் நேரலை அமர்வு மூலம் உரையாடினர். அப்போது அவர், பாதிக்கப்பட்ட அந்த நடிகையின் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை வேண்டுமென்றே பொதுவெளியில் அம்பலப்படுத்தினார்.
இதனையடுத்து நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கின் விசாரணையில், பாதிக்கப்பட்ட நடிகை தனது புகாரில் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளும் வகையில், முதன்மை ஆதாரங்கள் இருக்கின்றன என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனையடுத்து, நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபுவுக்கு இன்று கேரள போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
“குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர், சொந்த நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குப் பயணம் செல்வதை அல்லது வெளிநாட்டிலிருந்து உள்நாட்டிற்கு வருவதைத் தடுக்கும் நோக்கத்துடன், காவல் துறை உள்ளிட்ட சில துறைகளால் விடுக்கப்படும் சுற்றறிக்கையானது ‘கவன ஈர்ப்பு சுற்றறிக்கை’ (லுக் அவுட் சுற்றறிக்கை - எல்ஓசி) எனப்படுகிறது.”
பாபு மத்திய கிழக்கு நாடுகளில் எங்காவது பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆகவே பாபுவைக் கைது செய்ய இன்டர்போலின் ஆதரவைப் பெறுவதற்கான நடைமுறையின் ஒரு பகுதியாக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறு பாபுவுக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர் ஆஜராகத் தவறினால், அவரைத் தேடப்படும் நபராகப் பட்டியலிட அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி விஜய் பாபு முயற்சித்து வந்தார் என்று அவர் தரப்பு கூறியுள்ளது. முன்ஜாமீன் கிடைப்பது சிரமம் என்பதால், விஜய் பாபு கைது செய்யப்பட்டு சப்-ஜெயிலில் அடைக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.