விஜய் மல்லையா, நீரவ் மோடி இந்தியாவிடம் ஒப்படைக்கவே விரும்புகிறோம்: போரிஸ் ஜான்சன்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை தந்துள்ளார்.
புதுடெல்லி,
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை தந்துள்ளார். நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போரிஸ் ஜான்சன், இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது போரிஸ் ஜான்சனிடம், இந்திய வங்கிகளில் கடன் மோசடி செய்து விட்டு லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி ஆகியோர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த போரிஸ் ஜான்சன் கூறியதாவது:- “ நீங்கள் குறிப்பிட்ட இரண்டு தனிநபர்களை பொருத்தவரை நாடு கடத்தல் வழக்கு, இதில் பல்வேறு சட்ட ரீதியான நுட்பமான விஷயங்கள் உள்ளதால் சற்று கடினம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இங்கிலாந்து அரசாங்கம் அவர்களை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் கூறுவது என்னவென்றால், வழக்குவிசாரணையை எதிர்கொள்வதற்காக அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கவே விரும்புகிறோம். இந்தியாவில் இருந்து வரும் கோடீஸ்வரர்களையும் திறமை மிக்க நபர்களையும் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இந்தியாவில் உள்ள சட்டத்திலிருந்து தப்பிக்க எங்கள் சட்ட அமைப்பைப் பயன்படுத்த விரும்புபவர்களை நாங்கள் வரவேற்பதில்லை” என்றார்.