டெல்லியில் சோனியாவுடன் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் சந்திப்பு..!!
டெல்லியில் சோனியாகாந்தியுடன் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் நேற்று சந்தித்தனர்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்ட கட்சியின் மூத்த தலைவர்களுடன் கட்சித்தலைவர் சோனியா அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த வரிசையில் நேற்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளை சந்தித்தார்.
அதன்படி ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் ஆகியோர் டெல்லியில் அவரை சந்தித்தனர். சோனியாவின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பில், பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டார்.
பல மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில், எதிர்வரும் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் கட்சியை பலப்படுத்த பிரசாந்த் கிஷோர் வழங்கியுள்ள திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தோல்வியில் துவண்டு போயுள்ள காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகம் அளிப்பதற்காக பிரசாந்த் கிஷோர் வழங்கியுள்ள பரிந்துரைகளை ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.