உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் டெல்லி பாஜக தலைவர்கள் சந்திப்பு
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை டெல்லி பாஜக தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசினர்.
புதுடெல்லி,
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 8 போலீஸார் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
வன்முறை சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. வன்முறையில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, வன்முறை நடந்த ஜஹாங்கீர்பூரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இன்று இடிக்கப்படும் என வடக்கு டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் தடை விதித்தையடுத்து, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை டெல்லி பாஜக தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசினர். அமித்ஷாவின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. எனினும், இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து தகவல் எதுவும் பாஜக தலைவர்கள் தெரிவிக்கவில்லை. எனினும், டெல்லி ஜாஹாங்கிர்புரி விவகாரம் குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டு இருக்கக் கூடுமென்று டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.