இந்திய எல்லைக்கு அருகே செல்போன் கோபுரங்கள் அமைத்த சீனா

லடாக்கில் இந்திய எல்லைக்கு அருகே 3 செல்போன் கோபுரங்களை சீனா நிறுவியுள்ளது பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

Update: 2022-04-17 21:56 GMT
புதுடெல்லி,

லடாக்கில் இந்திய-சீன படைகளுக்கு இடையே கடந்த 2020-ம் ஆண்டு நடந்த மோதலுக்குப்பின் இரு தரப்பும் அங்கே படைகளை குவித்துள்ளன. இதனால் அங்கு பதற்றம் நீடிப்பதால், படைகளையும், ஆயுதங்களையும் திரும்பப்பெறுவது குறித்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன் பயனாக அங்கு சர்ச்சைக்குரிய பகுதிகளாக திகழும் ஓரிரு இடங்களில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டன. ஆனால் மீதமுள்ள சில பகுதிகளில் இன்னும் படைகள் தொடர்ந்து உள்ளன.

இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கிறது. அதேநேரம் இருதரப்பு பேச்சுவார்த்தையும் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் சீனா தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் பங்கோங் ஏரியில் பாலம் ஒன்றை கட்டியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக அங்கு செல்போன் கோபுரங்கள் அமைக்கும் பணிகளையும் சீனா மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இதை லடாக் கவுன்சிலர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

லடாக்கின் சுசுல் கவுன்சிலரான கோன்சோக் ஸ்டான்சின் இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில், ‘பங்கோங் ஏரியில் பாலம் கட்டும் பணிகளை முடித்த சீனா, ஹாட்ஸ்பிரிங் பகுதியில் 3 செல்போன் கோபுரங்களை நிறுவி உள்ளது. இது இந்திய பகுதிக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது’ என குறிப்பிட்டு உள்ளார்.

இது கவலையளிக்கும் ஒரு விஷயம் அல்லவா? என கேள்வி எழுப்பியிருக்கும் அவர், மக்கள் வாழும் கிராமங்களில் கூட தங்களுக்கு 4ஜி வசதி இல்லை எனவும், தனது தொகுதிக்கு உட்பட்ட 11 கிராமங்களில் 4ஜி வசதி இல்லை என்றும் கூறியுள்ளார்.

எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வரும் சீனாவின் இந்த செயல் லடாக் எல்லைப்பகுதியிலும், மத்திய அரசு வட்டாரங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய எல்லைக்கு மிக அருகே சீனா இரட்டை பயன்பாட்டு கட்டுமானங்களை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா சமீபத்தில் கூறியிருந்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில் சீனாவின் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்