உத்தரகாண்டில் 7 வயது சிறுவனை கடித்துக் கொன்ற சிறுத்தைப்புலி

உத்தரகாண்ட் மாநிலத்தில் 7 வயது சிறுவனை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றது.

Update: 2022-04-17 20:34 GMT
கோப்புப்படம்
டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் தேரி மாவட்டம் அகோரி கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. காட்டுத்தீயால் வனப்பகுதி அழிந்து வருவதால், அங்குள்ள வன விலங்குகள் குடியிருப்பை நோக்கி வருவது வழக்கமாகி விட்டது. இந்தநிலையில், அகோரி கிராமத்துக்குள் நள்ளிரவு நேரத்தில் ஒரு சிறுத்தைப்புலி புகுந்தது. 

அங்கு தன் வீட்டு முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு 7 வயது சிறுவனை அப்படியே இழுத்துச் சென்றது. அவனை ஒரு புதருக்குள் இழுத்துச்சென்று கடித்து கொன்றுவிட்டு தப்பியது. சிதைந்த நிலையில் சிறுவன் உடல் புதருக்குள் கிடப்பதை கண்டு பெற்றோர் கதறி அழுதனர்.

இதற்கிடையே, தகவல் அறிந்து வனச்சரகரும், உயர் அதிகாரிகளும் விரைந்து வந்தனர். சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். ஆனால், சிறுத்தைப்புலியை சுட்டுக்கொல்ல ஆள் நியமிக்கும்வரை சிறுவன் உடலை ஒப்படைக்க முடியாது என்று கிராம மக்கள் மறுத்தனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சம்பவத்தால், அகோரி கிராமத்தில் பீதி நிலவுகிறது. கடந்த சில நாட்களாக சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார வினியோகம் இல்லை என தெரிகிறது. புகார் தெரிவித்தும், மின்சார துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் செய்திகள்