1 லட்சம் நல்வாழ்வு மையங்களில் இ-சஞ்சீவனி தொலைபேசி ஆலோசனை வசதி தொடக்கம்!
இதன் மூலம், சாதாரண குடிமக்களும் நாட்டின் மிகப்பெரிய டாக்டர்களிடம், மருத்துவ ஆலோசனை பெற முடியும்.
புதுடெல்லி,
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 1 லட்சம் நல்வாழ்வு மையங்களில் இ-சஞ்சீவனி தொலைபேசி ஆலோசனை வசதியை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று திறந்து வைத்தார்.
அழகிய இந்தியா திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட, நலவாழ்வு மையங்கள் இன்று நான்காவது ஆண்டு தினத்தை கொண்டாடுகின்றன.அதன் ஒரு பகுதியாக, ஆரோக்கிய இந்தியா நலவாழ்வு மையங்கள் மூலம், ஏராளமான பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த மாத இறுதிவரை 1,17,440 மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த மையங்களில் வீட்டில் இருந்தே மருத்துவ ஆலோசனை பெறும் வசதியான 'இ-சஞ்சீவனி' முறையை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
அதன்படி 1 லட்சம் நல்வாழ்வு மையங்களில் இன்று முதல், இ-சஞ்சீவனி முறை அமல்படுத்தப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறினார்.
மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியிருப்பதாவது, "இதன் மூலம், சாதாரண குடிமக்களும் நாட்டின் மிகப்பெரிய டாக்டர்களிடம், மருத்துவ ஆலோசனை பெற முடியும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மீதான பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை இந்த மையங்கள் நிஜமாக்கி வருகின்றன.
வருங்காலங்களில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம் சுகாதாரத் துறையில் பெரிய புரட்சியைக் கொண்டுவரும். மேலும், ஏப்ரல் 18 முதல் 23 வரை, நாட்டின் ஒவ்வொரு வட்டாரத்திலும், சுகாதார முகாம் ஏற்பாடு செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார்.