டெல்லியில் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கீழே குதித்த இளம்பெண் உயிரிழப்பு
கிழக்கு டெல்லியில் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கீழே குதித்த இளம்பெண் உயிரிழந்து உள்ளார்.
புதுடெல்லி,
கிழக்கு டெல்லியில் அக்ஷர்தம் மெட்ரோ ரெயில் நிலையத்தின் புளூ லைன் பிரிவில் கட்டிடத்தின் மேல் பகுதிக்கு இளம்பெண் ஒருவர் நேற்று காலை 7.30 மணியளவில் சென்றுள்ளார். இதனை பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) வீரர்கள் கவனித்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து, அவர்கள் இளம்பெண்ணிடம் கீழே வரும்படி கெஞ்சி கேட்டுள்ளனர். அவரை சமரசப்படுத்தும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதில் அதிகாரிகள் சிலர், ஒருவேளை இளம்பெண் குதித்து விட்டால், அவரை காப்பாற்றுவதற்காக போர்வை ஒன்றை கொண்டு வந்தனர்.
சி.ஐ.எஸ்.எப். குழு ஒன்று உடனடியாக தரை தளத்திற்கு சென்று போர்வைகள், படுக்கை விரிப்புகள் ஆகியவற்றை அருகேயுள்ள கடைகளில் இருந்து வாங்கி வந்து பாதுகாப்பு வலை அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினர்.
இந்நிலையில், அந்த பெண் மெட்ரோ ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து விட்டார். அவர் பாதுகாப்பு வலையில் விழுந்தபோதும் படுகாயமடைந்து உள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அதில் பலனின்றி அவர் நேற்று மாலை உயிரிழந்து உள்ளார். பஞ்சாப்பின் ஹோசியார்பூர் பகுதியை சேர்ந்த அவர், அரியானாவின் குருகிராமில் பணிபுரிந்து வந்துள்ளார்.
சமீபத்தில் அவர் வேலையில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் வந்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.