சுலப மாத தவணையில் மின்சார ஸ்கூட்டர்: டெல்லி அரசு ஊழியர்களுக்கு வாய்ப்பு
சுலப மாத தவணையில் மின்சார ஸ்கூட்டர் வாங்க டெல்லி அரசு ஊழியர்களுக்கு வாய்ப்பு உருவாகி உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் காற்று மாசை குறைப்பதற்காக மின்சார வாகன பயன்பாட்டை அம்மாநில அரசு ஊக்குவித்து வருகிறது.
அதன்படி, டெல்லி அரசு ஊழியர்கள் சுலப மாத தவணையில் மின்சார இருசக்கர வாகனங்களை வாங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. டெல்லி அரசில், 2 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
அவர்கள் தங்கள் துறை மூலமாக மின்சார இருசக்கர வாகனங்களை வாங்கிக்கொள்ளலாம். அவர்கள் மாத சம்பளத்தில் இருந்து சுலப மாத தவணை (இ.எம்.ஐ.) கழித்துக்கொள்ளப்படும்.
இத்திட்டத்துக்காக, சி.இ.எஸ்.எல். என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செயல்பட டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. மின்சார வாகன சார்ஜ் ஏற்றும் நிலையங்களையும் சி.இ.எஸ்.எல். அமைக்கும்.
டெல்லியில் புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களில், மூன்றில் இரண்டு பங்கு இருசக்கர வாகனங்களாக உள்ளன. எனவே, இருசக்கர வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றினால், காற்று மாசை கணிசமாக குறைக்க முடியும் என்று கருதப்படுகிறது.
இதுபோல், மின்சார சைக்கிள் வாங்குபவர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 500 வரை ஊக்கத்தொகை வழங்கும் மற்றொரு திட்டத்தையும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.