மராட்டிய மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவீன் தரேக்கருக்கு போலீசார் சம்மன்
வங்கி இயக்குனர் பதவி மோசடி வழக்கில் பிரவீன் தரேக்கருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
பதவி மோசடி
பா.ஜனதா மூத்த தலைவரும், மராட்டிய மேல்-சபை எதிர்க்கட்சி தலைவருமான பிரவீன் தரேக்கர் மும்பை வங்கியில் இயக்குனர் பதவி வகித்தவர். இவர் தொழிலாளர் என்று கூறி வங்கி இயக்குனர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு மோசடி செய்ததாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தனஞ்செய் ஷிண்டே போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில் போலீசார் பிரவீன் தரேக்கர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை மும்பை ஐகோர்ட்டு சமீபத்தில் நிராகரித்து விட்டது. மேலும் போலீசாரின் நடவடிக்கையில் இருந்து நிவாரணம் அளிக்கவும் ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
சம்மன்
இந்த நிலையில் மாதா ரமாபாய் அம்பேத்கர் மார்க் போலீஸ் நிலைய போலீசார் நேற்று பிரவீன் தரேகருக்கு சம்மன் அனுப்பினர். அதில், வருகிற திங்கட்கிழமை (நாளை) போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதே போலீஸ் நிலையத்தில் கடந்த 4-ந் தேதி அவர் விசாரணைக்கு ஆஜரானது குறிப்பிடத்தக்கது.
இடைக்கால நிவாரணம் அளிக்க ஐகோர்ட்டு மறுத்து விட்ட நிலையில், பிரவீன் தரேக்கருக்கு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.