பெங்களூருவில் 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மத்திய உள்துறை அமைப்புகள் விசாரணை
பெங்களூருவில் 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கு குறித்து மத்திய உள்துறை அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் மர்மநபர்களை பிடிக்க 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களாக ஹிஜாப், ஹலால் உள்ளிட்ட விவகாரங்களால் பரபரப்பு நீடித்து வருகிறது.
வெடிகுண்டு மிரட்டல்
இந்த நிலையில் பெங்களூரு மகாதேவபுராவில் உள்ள கோபாலன் இன்டர்நேஷனல் பள்ளி, வர்த்தூரில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி, ஹெண்ணூரில் உள்ள செயின்ட் வின்சென்ட் பள்ளி உள்ளிட்ட 15 பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் மர்மநபர்கள் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருந்தனர்.
ஒரே நேரத்தில் 15 பள்ளிகளுக்கு மர்மநபர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே பள்ளி வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இ்ந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் பதறியடித்துக்கொண்டு பள்ளிகளுக்கு வந்து, தங்களது பிள்ளைகளை அவசர, அவசரமாக வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.
வெடிகுண்டு சிக்கவில்லை
மேலும் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், கழிவறைகள், விளையாடும் இடம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் அங்குலம், அங்குலமாக சல்லடை போட்டு தீவிர சோதனை நடத்தினர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதா என சோதனையிட்டனர்.
ஆனால் 15 பள்ளிகளிலும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
2 தனிப்படைகள் அமைப்பு
இந்த சம்பவம் குறித்து ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி பப்ளிக் பள்ளி நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மர்மநபர்கள் மீது வர்த்தூர் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இதற்கிடையே பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்களை பிடிக்க கிழக்கு, ஒயிட்பீல்டு மண்டல துணை போலீஸ் கமிஷனர்கள் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இ-மெயில் வந்த ஐ.பி. எண்ணை போலீசார் கண்டுபிடித்து உள்ளதாகவும், இதனால் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவில் ஒரே நேரத்தில் 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தை, மத்திய உள்துறை அமைப்புகள் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கர்நாடகத்தில் ஹிஜாப், ஹலால் விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்த நிலையில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்துள்ளதால், இதில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மத்திய உள்துறை அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய உள்துறை அமைப்புகள் விசாரணை
இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடக உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூருவில் 15 பள்ளிகளுக்கு இ-மெயில் அனுப்பி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. பள்ளிகளில் நள்ளிரவு வரை நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு, வெடிப்பொருட்கள் கிடைக்காததால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பள்ளிகளுக்கு வந்த இ-மெயில் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டலில் தொடர்பு இருக்கலாம் என்பதால், மத்திய உள்துறை விசாரணை குழு விசாரித்து வருகிறது.
கர்நாடக அரசு கேட்டு கொள்ளாமலேயே, மத்திய விசாரணை குழு தாங்களாகவே முன்வந்து வெடிகுண்டு மிரட்டல் பற்றி விசாரித்து வருகிறார்கள். பெங்களூரு போலீசாரும் வெடிகுண்டுமிரட்டல் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்டியாவில் அல்லாகூ அக்பர் என்ற கோஷமிட்ட மாணவிக்கு ஆதரவாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பேசிய விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.