மாணவியை அடித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்

நெற்றியில் திலகம் அணிந்து பள்ளிக்கு சென்றதற்காக மாணவியை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Update: 2022-04-06 14:34 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் ரஜோரியில், பள்ளிக்கு திலகம் அணிந்து வந்ததற்காக மாணவியை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

வடமாநிலங்களில் நவராத்திரி பண்டிகையானது, ஏப்ரல் 2 முதல் 11 வரை 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையையொட்டி, நெற்றியில் திலகம் அணிந்து ஒரு  மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார். இதனை கண்டித்த ஆசிரியர் அந்த மாணவியை அடித்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் மாணவியை தாக்கியதை அடுத்து போலீஸ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் ஒரு இந்து குடும்பம் நெற்றியில் திலகம் அணிந்து பள்ளிக்குச் சென்ற எங்கள் மகள், பள்ளி ஆசிரியரால் அடிக்கப்பட்டாள் என்று தெரிவித்த புகாரையடுத்து அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

நிசார் அஹமது என அடையாளம் காணப்பட்ட அந்த ஆசிரியர் தற்போது, ரஜோரி மாவட்ட துணை ஆணையரின் உத்தரவின்படி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது, சமூக ஊடகங்களில், காடூரியன் பஞ்சாயத்தில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில், 2 சிறுமிகள் ஒரு ஆசிரியரால் தாக்கப்படுவது குறித்து செய்தி வெளியானதையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதையும், குழந்தை தாக்கப்பட்டதற்கான காரணத்தை கண்டறியவும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஜோரி சரக மூத்த காவல் கண்காணிப்பாளர் முகமது அஸ்லம் சவுத்ரி கூறுகையில், “மைனர் சிறுமியை தாக்கியதாகவும், ஆசிரியர் ஒருவர் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் எங்களுக்கு புகார் வந்தது. 

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் விசாரணையை தொடங்கியுள்ளோம்” என்றார்.

இதுபோன்ற சம்பவங்கள் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். இத்தகைய சம்பவங்களை முன்னிறுத்தி சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் படி மதத்திற்காக சாமானியர்கள் சண்டையிடுவார்கள் என்று சிறுமியின் தந்தை கவலையுடன் கூறினார்.

அவர் கூறுகையில், “மதத்தின் பெயரால் இது போன்ற செயல்கள் தொடர்ந்தால், நாம் அனைவரும் ஒருவரையொருவர் சண்டையிட்டு தலையை உடைத்துக் கொண்டிருக்க நேரிடும்” என்றார்.

ஒரு குழந்தையை காயப்படுத்துவது ஒரு குற்றமாகும், மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 323, 325, 352 மற்றும் 506 இன் கீழ் ஒரு நபரை தண்டனைக்கு உட்படுத்தலாம். மேலும், ஆறு மாதங்கள் வரை  சிறைத்தண்டனை நீட்டிக்கப்படலாம், அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும் செய்திகள்