சத்தீஷ்காரில் 15 வீடுகளை சூறையாடிய யானைக்கூட்டம்
சத்தீஷ்காரின் சுர்குஜாவில் யானைக்கூட்டம் ஒன்று 15 வீடுகளை சூறையாடி விட்டு சென்றுள்ளது.
சுர்குஜா,
சத்தீஷ்காரில் யானைகள் கூட்டம், கூட்டமாக ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு செல்வதுண்டு. அவை கோடை காலத்தில் தண்ணீர் தேடியும், உணவுக்காகவும் வன பகுதியில் இருந்து, சில சமயங்களில் ஊருக்குள் வந்து விடும்.
இந்த நிலையில், சுர்குஜாவில் லக்கன்பூர்-தரம்ஜெய்கர் எல்லை பகுதியில் 15 யானைகள் அடங்கிய யானைக்கூட்டம் ஒன்று சுற்றி திரிந்து வருகின்றது.
இதேபோன்று ராஜ்புரா-லுந்த்ரா எல்லையிலும், 5 யானைகள் ஒன்றாக சுற்றி திரிந்து வருகின்றன. இந்த நிலையில் சுர்குஜாவில் யானைக்கூட்டம் ஒன்று ஊருக்குள் புகுந்து 15 வீடுகளை சூறையாடி விட்டு சென்றுள்ளது. இதனால் வீடுகளின் ஓடுகள், மேற்கூரைகள் பெயர்த்து எறியப்பட்டு உள்ளன.
அந்த பகுதியில் வசிக்கும் கிராமவாசிகள் தங்களது வீடுகளில் சேமித்து வைக்கும் மஹுவா எனப்படும் இலுப்பை மரத்தின் பூக்கள், பழங்கள் மற்றும் உப பொருட்களின் வாசனையால் யானைகள் ஈர்க்கப்படுகின்றன. அதனால் அவை ஊருக்குள் வந்து விடுகின்றன என்று வன துறை அதிகாரி பங்கஜ் கமல் கூறியுள்ளார்.