மராட்டியத்தில் குடிபட்வா உற்சாக கொண்டாட்டம்

2 ஆண்டுகளுக்கு பிறகு மராட்டியத்தில் குடிபட்வா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Update: 2022-04-02 20:35 GMT
குடிபட்வா கொண்டாட்டம்

மராட்டியத்தில் கடந்த 2 ஆண்டுகளாக குடிபட்வா எனப்படும் மராட்டிய புத்தாண்டு எளிமையாகவே கொண்டாடப்பட்டு வந்தது. இந்தநிலையில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து நேற்று முதல் மாநிலத்தில் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று மாநிலத்தில் குடிபட்வா கொண்டாட்டம் களைகட்டியது. பொது மக்கள் வீடுகளில் 'குடி'யை கட்டி சாமி தரிசனம் செய்தனர். இதேபோல ஆண்களும், பெண்களும் தங்களது பாரம்பரிய உடையணிந்து மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

மும்பையில் கிர்காவ், காட்கோபர், முல்லுண்டு, தாராவி, ஒர்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டியது.

பெண்கள் பேரணி

பெண்கள் சேலை கட்டி, கூலிங் கிளாசுடன் புல்லட் மோட்டார் சைக்கிள்களில் பேரணியாக சென்று அசத்தினர். இதேபோல பொது மக்கள் வீதிகளில் இசை வாத்தியங்களுக்கு நடனமாடி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.



இதற்கிடையே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குடிபட்வாவையொட்டி நேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இதேபோல அரசியல் கட்சியினரும், சினிமா நட்சத்திரங்களும் பொது மக்களுக்கு குடிபட்வா வாழ்த்துகளை கூறினர்.

மேலும் செய்திகள்