நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 10வது முறையாக உயர்வு

நாடு முழுவதும் 12 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 10வது முறையாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு உள்ளது.

Update: 2022-04-02 03:20 GMT



புதுடெல்லி,



நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  கடந்த ஆண்டு நவம்பர் 4ந்தேதியில் இருந்து உயர்த்தப்படாமல் இருந்து வந்த எரிபொருள் விலை 137 நாட்களுக்கு பின்பு, கடந்த 22ந்தேதியில் இருந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

இதன்படி, நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 80 காசுகள் இன்று அதிகரித்து உள்ளது.  இதனால், கடந்த 12 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 10 முறை திருத்தியமைக்கப்பட்டதில், லிட்டர் ஒன்றுக்கு மொத்தம் ரூ.7.20 உயர்த்தப்பட்டு உள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.61க்கும், டீசல் விலை ரூ.93.87க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  மும்பையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 85 காசுகள் இன்று அதிகரித்து உள்ளது.  இதனால், பெட்ரோல் விலை ரூ.117.57க்கும், டீசல் விலை ரூ.101.79க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் தலா 76 காசுகள் அதிகரித்து உள்ளது.  இதனால், லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.108.21க்கும், டீசல் ரூ.98.21க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு மத்திய அரசு உற்பத்தி வரியில் லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோலுக்கு ரூ.5ம், டீசலுக்கு ரூ.10ம் குறைத்தது.  நாட்டின் சில்லரை விற்பனை விலையை குறைக்கும் நோக்கில் இது செயல்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, மக்களுக்கு பலன் ஏற்படும் வகையில் பல்வேறு மாநில அரசுகள் வாட் வரியை குறைத்தன.  இந்த நிலையில், நாடு முழுவதும் 12வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை 10வது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது வாகன ஓட்டிகளிடையே பெரும் அவதி ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்