தமிழகத்தில் கல்வி, சுகாதார சேவையில் அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி

தமிழகத்தில் கல்வி மற்றும் சுகாதார சேவையில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என டெல்லியில் பள்ளிகளை பார்வையிட்ட பின் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியில் கூறியுள்ளார்.

Update: 2022-04-01 08:09 GMT

புதுடெல்லி,


டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை இன்று சந்தித்து பேசியுள்ளார்.  இதன்பின்னர், டெல்லியில் உள்ள பள்ளி கூடங்களுக்கு கெஜ்ரிவாலுடன் நேரில் சென்று, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவற்றை பார்வையிட்டார்.  அந்த பள்ளி கூடங்களின் மாணவ மாணவியருடன் உரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், டெல்லி மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.  இதேபோன்று சமூக சுகாதார மையங்களாக செயல்பட்டு வரும் டெல்லியில் உள்ள மொஹல்லா கிளினிக்குகளையும் அவர் பார்வையிட்டார்.

பொருளாதார அடிப்படையில் பின்தங்கியபிரிவினர் பயன்பெறும் நோக்கில் இவை அமைந்துள்ளன.  இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கல்வி மற்றும் சுகாதார சேவைகளில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.  தமிழகத்திலும் நவீன பள்ளிக்கூடங்களை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அதற்கான தொடக்க நிகழ்ச்சியில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கலந்து கொள்வார் என நான் உறுதியாக கூறுகிறேன்.  தமிழக மக்களின் சார்பில் நான் அவரை அழைத்துள்ளேன் என கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்