கள்ளக்காதலை கண்டித்த கணவன் கொலை... மனைவி உள்பட 5 பேர் கைது
கள்ளக்காதலை கண்டித்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வசாய்,
பால்கர் மாவட்டம் மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை சாபாலே அருகே உள்ள தகிசர்-டுங்கிபாடா பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 23-ந்தேதி ஆண் சடலம் கிடப்பதாக மனோர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டவர் தானே மேற்கு கோபட் பகுதியை சேர்ந்த தினேஷ் பஞ்சால்(வயது42) என்பது தெரியவந்தது.
இவரது மனைவி ஷீத்தல் (40) என்பவருடன் வசித்து வந்தார். போலீசார் தினேஷ் பஞ்சால் மற்றும் ஷீத்தல் செல்போன் அழைப்புகளை கொண்டு விசாரித்தனர்.
இதில் ஷீத்தலுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் நரேஷ் போதானி (27) என்பருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது பற்றி அறிந்த கணவர் தினேஷ் பஞ்சால் மனைவியை கண்டித்தார். இதனால் அவரை கொலை செய்ய கள்ளக்காதலன் நரேஷ் போதானியுடன் ஷீத்தல் திட்டம் போட்டார். கடந்த 23-ந்தேதி நரேஷ் போதானி கூட்டாளிகளான அஜய் மாதேரா (30), சதீஷ் ஹவ்சரே (24), ராகேஷ் (27) ஆகியோருடன் சேர்ந்து வராய் பகுதியில் உள்ள காலி இடத்தை பார்வையிட வருமாறு தினேஷ் பஞ்சாலை காரில் அழைத்து சென்றனர்.
பின்னர் அவர்கள் வழியில் தினேஷ் பஞ்சாலையின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை பள்ளத்தாக்கில் வீசி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஷீத்தல், கள்ளக்காதலன் நரேஷ் போதானி, கூட்டாளிகள் 3 பேர் என 5 பேரை கைது செய்தனர்.
இவர்களை பால்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.