டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை; 16 ஆண்டுகளுக்கு பின் சகோதரர்-சகோதரி கைது

டெல்லியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 16 ஆண்டுகளுக்கு பின் சகோதரர்-சகோதரி கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-03-31 09:11 GMT

புதுடெல்லி,


டெல்லியின் நங்லோய் பகுதியில் வசித்து வருபவர் ஜோகிந்தர் சிங்.  இவரது சகோதரி கமல்ஜீத் சிங் என்ற கம்லேஷ்.  கம்லேஷின் வீடு அருகே வாடகைக்கு வீடு எடுத்து ஜோகிந்தர் வசித்து வந்துள்ளார்.  தச்சராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த பகுதியில் தொழிலாளியாக இருந்த ஒருவருடன் ஜோகிந்தர் நண்பராக பழகியுள்ளார்.  அவரது 13 வயது மகளிடம் பேச்சு கொடுத்துள்ளார்.  இதன்பின்பு அந்த சிறுமியிடம் வேலை தருகிறேன் என கூறியுள்ளார்.  ஜோகிந்தரின் பேச்சுக்கு ஏற்ப அதனை ஆமோதிப்பது போன்று அவரது சகோதரி கம்லேஷும் நடந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுமியை ஜோகிந்தர் தனது சொந்த கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.  சிறுமியை கட்டாயப்படுத்தி தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தி உள்ளார்.  அதன்பின் சிறுமியிடம் தகாத உறவு வைத்துள்ளார்.

இந்நிலையில், தனது மகளை காணவில்லை என கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் 19ல் சிறுமியின் தந்தை நங்லோய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  எனினும், அதன்பின்னர் குற்றவாளிகள் போலீசாரிடம் கிடைக்காமல் தப்பிவிட்டனர்.  சிறுமியை மீட்ட போலீசார் இருவருக்கு எதிராகவும் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.

கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 11ல் ஹசாரி கோர்ட்டானது சகோதரர்-சகோதரி இருவரையும் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் என அறிவித்தது.

தொடர்ந்து, டெல்லி மற்றும் உத்தர பிரதேச குற்ற பிரிவு போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டு, தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், இருவரும் டெல்லியில் இருந்து லோனி, பல்வால் மற்றும் காசியாபாத் மற்றும் என்.சி.ஆர்.ரின் பிற பகுதிகளுக்கு தங்களது இருப்பிடங்களை மாற்றி கொண்டே வந்துள்ளனர்.  அந்த பகுதிக்கு சென்று தங்களது தொழிலை தொடர்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர், ஜோகிந்தரை உத்தர பிரதேசத்தின் அலிகார் பகுதியில் வைத்து கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.

இதனையடுத்து மற்றொரு குற்றவாளியான கம்லேஷை டெல்லியின் கார்கர்டூமா மெட்ரோ ரெயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில், அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு விட்டனர் என்ற தகவல் தொடர்புடைய காவல் நிலையங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.  அதன்பின் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விட்டனர்.

மேலும் செய்திகள்