பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி, 45 பேர் காயம்
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சித்தூர்,
ஆந்திர மாநிலம் சித்தூரில் ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருப்பதியில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில் உள்ள பக்ரபேடா என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரவு நேரம் என்பதால், பயணத்தின் போது தூங்கி கொண்டிருந்த பயணிகள், அலறியடித்தனர். அவ்வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்ததையடுத்து, நிகழ்விடத்திற்கு மீட்புக்குழு விரைந்து வந்தது.
இந்த பயங்கர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 45 பேர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்று திருப்பதி காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.