மத்திய பல்கலைக்கழகங்களில் இனி பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை - யூ.ஜி.சி. அறிவிப்பு
சி.யூ.இ.டி. தேர்வு அடிப்படையில் தான் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நாடு தழுவிய அளவில் பொதுவான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அந்த நுழைவுத் தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு(யூ.ஜி.சி.) அறிவித்துள்ளது. 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை இந்த அடிப்படையில் தான் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு போல, மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கு சி.யூ.இ.டி (CUET) என்ற மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்பட உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் இல்லாமல் இந்த சி.யூ.இ.டி. தேர்வு அடிப்படையில் தான் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவு ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்றும் ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், குஜராத்தி, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையின் சாரம்சத்தின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.