உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு : குவாட் நாடுகள் ஏற்றுக்கொண்டது- ஆஸ்திரேலியா

உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை குவாட் நாடுகள் ஏற்றுக்கொண்டதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

Update: 2022-03-21 05:33 GMT
புதுடெல்லி

இந்தியா - ஆஸ்திரேலியா இருதரப்பு உச்சி மாநாடு இன்று திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை பல்வேறு துறைகளில் ஆஸ்திரேலியா அறிவிக்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கும் இடையிலான இன்றைய காணொளி காட்சி சந்திப்புக்கு முன்னதாக உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை குவாட் நாடுகள் ஏற்றுக்கொண்டதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

குவாட் என்பது இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்பு ஆகும்.பெரும்பாலும் கடல் ரீதியான பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

உக்ரைன் போரில் குவாட் நாடுகளில் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷியாவை கடுமையாக எதிர்த்து உள்ளன. அதிலும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்து உள்ளன.

ஆனால் குவாட் நாடுகளின் நிலைப்பாட்டிற்கு எதிராக இந்தியா வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. உக்ரைனை ஆதரிக்காமல், நடுநிலையாக இருக்கும் நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது.

அதோடு ரஷியாவிடம் இருந்து கூடுதல் எண்ணெய் வாங்கும் முடிவையும் இந்தியா துணிச்சலாக எடுத்து இருக்கிறது.

இதனால் குவாட் இனிமேல் இந்தியாவுடன் நிற்குமா. அல்லது குவாட் என்ற அமைப்பு இனி உயிர்ப்புடன் இருக்குமா என்பதே கேள்விக்குறியாகி இருந்தது. ஆனால் உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை குவாட் நாடுகள் ஏற்றுக்கொண்டதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கான ஆஸ்திரேலியாவின் தூதர் பேரி ஓ பேரல் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் நிலைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். அதை ஏற்றுக்கொள்கிறோம்.

எல்லா நாடுகளின் உறவும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு நாட்டிற்கும் தனி தனி வெளியுறவுக்கொள்கை இருக்கும். பிரதமர் மோடி ஏற்கனவே இந்த போர் நிறுத்தத்தப்பட வேண்டும் என்று கூறிவிட்டார். அதோடு தனது நட்புகளை பயன்படுத்தி போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை செய்துவிட்டார். இதுவே நல்ல விஷயம்தான். இதனால் இந்தியாவின் நிலைப்பாட்டை எதிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது என கூறி உள்ளார். 

சமீபத்தில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் பசகி அளித்த பேட்டியில், 

இந்தியாவின் செயல்பாடு அமெரிக்கா விதிமுறைகளுக்கு எதிரானது கிடையாது. அமெரிக்கா விதித்திருக்கம் பொருளாதார தடைகளுக்கு எதிரானது இது என்று சொல்ல முடியாது. ஆனால் இந்தியா வரலாற்றில் தவறான பக்கத்தில் நின்று விட கூடாது. என்று கூறி இருந்தது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்