பஞ்சாப் வெற்றியை தொடர்ந்து ராஜஸ்தானில் களமிறங்கும் ஆம் ஆத்மி..!
பஞ்சாப் வெற்றியை தொடர்ந்து ராஜஸ்தானில் ஆம் ஆத்மி கட்சி களமிறங்க திட்டமிட்டுள்ளது.
ஜெய்ப்பூர்,
பஞ்சாப்பில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து பகவந்த் மான் பஞ்சாப்பின் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். பஞ்சாப்பில் கிடைத்த அமோக வெற்றியால் உற்சாகமடைந்துள்ள ஆம் ஆத்மி கட்சி ராஜஸ்தானில் களமிறங்க திட்டமிட்டுள்ளது.
ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், ராஜஸ்தானில் ஆம் ஆத்மி கட்சியை பலப்படுத்த ஜெய்ப்பூரில் இரண்டு நாள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ராஜ்யசபா எம்.பி சஞ்சய் சிங், மார்ச் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சியின் நலக் கொள்கைகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க உள்ளார்.
துவாரகாவைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் சட்டசபை உறுப்பினரும், முன்னாள் எம்.பியுமான மகாபல் மிஸ்ராவின் மகன் வினய் மிஸ்ராவுக்கு இந்த மாநாட்டின்போது பொறுப்பு வழங்கப்படலாம் என்று கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் புதுடெல்லிக்கு அருகில் ராஜஸ்தான் இருப்பதால் அங்கு கட்சியை வலுப்படுத்த, இந்த இரண்டு நாள் மாநாட்டை நடத்துகிறது. ராஜஸ்தானில் கட்சியின் மாநிலத் தலைவரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநில இணை பொறுப்பாளர் கேம்சந்த் ஜாகிர்தார் கூறியுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 200 தொகுதிகளில் 142 வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் ஒரு தொகுதியில் கூட ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.