பஞ்சாபில் 92 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி..! முழு விவரம்

மாநில கட்சி ஒன்று இன்னொரு மாநிலத்தில் வெற்றிக் கொடியை நாட்டி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

Update: 2022-03-10 15:24 GMT
சண்டிகர்,

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சி ஒன்று இன்னொரு மாநிலத்தில் வெற்றிக் கொடியை நாட்டி இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று சாதனையை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நிகழ்த்திக் காட்டி இருக்கிறது.

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி பஞ்சாபில் முதல் முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது.

இந்நிலையில் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் 117 தொகுதிகளுக்கான முடிவுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றுள்ளது. தொடர்ந்து, காங்கிரஸ் 18 தொகுதிகளை கைப்பற்றி 2-ம் இடத்தில் உள்ளது. 

மேலும், பாஜக 2 தொகுதிகளிலும், ஷிரோமணி அகாலி தளம் 3 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதிகளிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

இதைத்தவிர, ஆம் ஆத்மி 42.01 சதவீத வாக்கும், காங்கிரஸ் 22.98 சதவீத வாக்குகளும், ஷிரோமணி அகாலி தளம் 18.38 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்