இந்தியாவில் கொரோனா 4-வது அலை ஏற்பட வாய்ப்பு இல்லை: மூத்த மருத்துவ நிபுணர் தகவல்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

Update: 2022-03-08 09:26 GMT
Photo Credit: PTI
புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக  முழுவதும் வியாபித்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக வைரசின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது. 

இதனால், உலக நாடுகள் இன்னும் முழுமையாக பழைய இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. கொரோனா வைரஸ் உருமாறி வந்து பல அலைகளாக பரவி வருவதால் நோய்த்தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகள் இன்னும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதத்தில் 3-வது அலை பரவத்தொடங்கியது. ஜனவரி 21 ஆம் தேதி உச்சம் தொட்ட இந்த வைரஸ் பரவல்  பிப்ரவரியில் தணியத்தொடங்கியது. தற்போது தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் சரிந்து வருகிறது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. தொற்று பரவல் குறைந்து விட்டதால் கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலானவை தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், மீண்டும் கொரோனா பரவல் ஏற்படலாம் என ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். 

இந்த நிலையில்,  இந்தியாவில் கொரோனா 4-வது அலை ஏற்பட வாய்ப்பு இல்லை என்று மூத்த மருத்துவ நிபுணரான டி ஜேக்கப் ஜான் தெரிவித்துள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவரான  ஜேக்கப் ஜான் இது பற்றி கூறுகையில், இந்தியாவில் கொரோனா 3-வது அலை பரவல் முடிவுக்கு வந்துவிட்டதை உறுதியுடன் கூறலாம். நாட்டில் கொரோனா மீண்டும் எண்டமிக் கட்டத்தை மீண்டும் எட்டிவிட்டது.  எதிர்பாரத வகையில் உருமாறி பரவாத வரையில், இந்தியாவில் கொரோனா 4-வது அலை ஏற்படாது என்பதை உறுதியாக நம்பலாம்” என்றார். 

மேலும் செய்திகள்