தெலுங்கானா: கவர்னர் உரை இல்லாமல் தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் - இன்று பட்ஜெட் தாக்கல்
தெலுங்கானாவில் கவர்னர் உரை இல்லாமல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது.
ஐதரபாத்,
தெலுங்கானா சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையின்றி இன்று தொடங்கும் என அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. முதல் நாளான இன்று நிதி மந்திரி ஹரிஷ் ராவ் 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் வழக்கமாக இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவது வழக்கம். ஆனால் இந்த கூட்டத்தொடர் கவர்னர் உரை இல்லாமல் தொடங்குகிறது.
இந்த தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து இரு அவைகளின் தலைவர்களும் நேற்று விரிவான ஆலோசனை நடத்தினர். இதில் மாநில தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சட்டசபையின் அலுவல் ஆய்வுக்குழு இன்று மாலையில் கூடி இந்த தொடருக்கான நாட்கள் மற்றும் நிகழ்ச்சி நிரலை முடிவு செய்யும் என சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
முன்னதாக இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இல்லை என்பதாலும் ஏற்கனவே நடந்த தொடரின் தொடர்ச்சி என்பதாலும் கவர்னரின் உரை தேவையில்லை என்றும் தெலுங்கானா அரசு விளக்கம் அளித்திருந்தது. தெலுங்கானா அரசின் இம்முடிவுக்கு அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தராஜன் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.