புதுச்சேரியை தொழில்துறையில் முன்னேறிய மாநிலமாக்குவதே கனவு: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

தொழில்துறையில் புதுச்சேரியை முன்னேறிய மாநிலமாக மாற்றுவதே கனவு என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2022-03-05 22:23 GMT
வேலைவாய்ப்பு முகாம்

காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் அரசு சார்பில் 2 நாள் மெகா வேலைவாய்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. முகாமை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

முகாமில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி), பொறியியல் உள்பட 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இளைஞர்களை பிடிக்கும்

கல்லூரியில் படித்து முடித்துவிட்டு வருபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். இதற்கு ஆதரவு இருந்தால் 6 மாதத்துக்கு ஒருமுறை கூட நடத்த முயற்சிக்கப்படும். நான் கவர்னர் என்ற முறையில் தொழில் முனைவோர் அனைவரையும் புதுச்சேரிக்கு வரவேற்கிறேன். வருங்காலத்தில் தொழில்துறையில் முன்னேறிய மாநிலமாக புதுச்சேரியை மாற்ற வேண்டும் என்பது தான் எங்களின் கனவாகும்.

இன்றைய இளைஞர்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள். ஏனென்றால் அந்த காலத்தில் இருந்த நிலை மாறி, இன்று மகன், அப்பாவுக்கு வீடு, வாகனம் வாங்கி கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இதில் இருந்து இளைஞர்கள் எந்தளவுக்கு முன்னேறியுள்ளனர், குடும்ப பாங்கோடு இருக்கின்றனர் என்பதை பார்க்க முடிகிறது.

சாதிக்க வேண்டும்

இளைஞர்களை நோக்கி, இந்த உலகம் சென்று கொண்டிருக்கிறது. இங்கு நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் வேலை பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள். வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் தம்மை தாமே தயார்படுத்திக்கொள்ள வேண்டும். சமுதாயத்தில் முன்னேற வேண்டும், ஏதாவது ஒன்றில் சாதிக்கவேண்டும். அதிகமாக புத்தகங்களையும், தலைவர்களின் சுயசரிதைகளையும் படியுங்கள். அதன் மூலம் வாழ்க்கையில் நாம் எப்படி முன்னேற வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தனியார் நிறுவனங்கள்

தொடக்க விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், விவிலியன் ரிச்சர்ட்ஸ், தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன், பதிவாளர் சிவராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முகாமில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பட்டதாரிகள் கலந்துகொண்டனர். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாளாக வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

மேலும் செய்திகள்