திருச்சூர்: வங்கியிலிருந்து ஜப்தி நோட்டீஸ் வந்ததால் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சூர் அருகே வங்கியிலிருந்து வீட்டை ஜப்தி செய்யும் நோட்டீஸ் அனுப்பியதால் மனமுடைந்த ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சூர்,
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நல்லன்கரை பகுதியில் வசிப்பவர் விஜயன் (60). இவர் இந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு இவருடைய மூத்த மகனின் திருமண செலவிற்காக தனது வீட்டின் ஆதாரத்தை வைத்து வங்கியில் எட்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அதற்கு பிறகு சரியாக தொழில் நடக்காததால் இவரால் கடனை கட்ட முடியவில்லை. சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை இவர் கட்டி இருந்தாலும் அது வட்டி பணத்திற்க்கு சரியாக உள்ளது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கடந்த ஐந்து வருடமாக கடனை கட்டும்படி வங்கியிலிருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் விஜயன் பணம் கட்ட தவறிவிட்டார். அதேநேரத்தில் வங்கிக்கடன் இவரது உள்ளத்தில் பெரிய சுமையாக காணப்பட்டது அதையொட்டி மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மீண்டும் வங்கியிலிருந்து வட்டியும் முதலும் சேர்த்து சுமார் 10 லட்சம் ரூபாய் அடைக்கும் படியும் குறிப்பிட்ட நேரத்தில் பணம் கட்ட தவறினால் வீடு ஜப்தி செய்யப்படும் எனவும் நோட்டீஸ் வந்தது. அன்று முதல் இவர் தூங்காமலும் சாப்பிடாமலும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முதல் விஜயனை இந்த பகுதியில் காணாததால் அவரது உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தார்கள். போலீசார் விஜயனை தேடி வந்த நிலையில் இன்று காலை வீட்டின் பின்புறம் உள்ள ஒரு புதரில் இருக்கும் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் காணப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து திருச்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயனின் உடலை மீட்டு திருச்சுர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விஜயனின் மரணம் குறித்து திருச்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். விஜயனின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.