உ.பி. தேர்தல்: யோகி ஆதித்யநாத் தொகுதி உள்பட 57 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு..!
உத்தரபிரதேச சட்டசபையின் 6-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது.
லக்னோ,
உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 5 கட்ட தேர்தல் முடிந்தநிலையில், நாளை (வியாழக்கிழமை) 6-வது கட்ட தேர்தல் நடக்கிறது.
10 மாவட்டங்களில் அடங்கிய 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. அந்த தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் இத்தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளனர்.
அங்கு 676 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில், கோரக்பூர் தொகுதியில் போட்டியிடும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முக்கிய வேட்பாளர் ஆவார். அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை.
மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு, பா.ஜனதாவில் இருந்து சமாஜ்வாடியில் சேர்ந்த சுவாமிபிரசாத் மவுரியா, 5 மந்திரிகள் ஆகியோரும் நாளை களம் காண்கிறார்கள். 2 கோடியே 14 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.